புலம்பெயர் தமிழர்கள் குறித்த விரிவான ஆய்வுகள் - அயலக தமிழர் தினவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
mk stalin

 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில், அயலகத் தமிழர்களுக்கான புதிய நலத் திட்டங்களை அறிவித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும்போதெல்லாம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கவனத்தில்கொண்டு, தாயுள்ளத்தோடு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, அயலகத் தமிழர் நாளான இன்று சில அறிவிப்புகளை மகிழ்ச்சியோடு நான் அறிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும்.

stalin

இரண்டாவதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். மூன்றாவதாக, அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
-என்ற அறிவிப்புகளை வெளியிடுவதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கக்கூடிய நான், உங்களில் ஒருவனாக, உங்களுடைய ஒரு சகோதரனாக, உங்களில் பலருக்கு அண்ணனாக, சிலருக்கு தம்பியாக, ஏன், அனைவருக்கும் உடன்பிறப்பாக நான் இருக்கிறேன். உங்களுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும். உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களால் ஒத்துழைப்பினை நீங்கள் வழங்குங்கள். இணைந்து நாம் பயணிப்போம்.

mk stalin

நம்மைக் கடலும் கண்டங்களும் பிரித்திருந்தாலும், தமிழ் இணைக்கும். உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு செழிக்கும். தமிழ்நாடு தழைக்கும். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்! தமிழரையும் வளர்ப்போம்" என்றார்.