விதிகளை மீறி கட்டுமானம்.. 1,124 இடங்களில் கட்டுமான பொருட்கள் பறிமுதல்.. - சென்னை மாநகராட்சி நடவடிக்கை..

 
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  விதிமீறி கட்டுமானம் நடைபெற்ற 1, 124 இடங்களில் கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்புத் துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டடங்களை கட்ட வேண்டும்.

பட்ஜெட்டில் கட்டுமானம் உள்பட பல்வேறு துறைகளில் அன்னிய முதலீட்டு விதிமுறைகளை தளர்த்த வாய்ப்பு

அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும். அதனடிப்படையில், 15  மண்டலங்களிலும் 01.01.2023 முதல் 11.01.2023 வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் 327 உரிமையாளர்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 181 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என  குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.  

சென்னை மாநகராட்சி

கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 10 கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. கட்டட அனுமதிக்கு மாறாக விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் கட்டுமானப் பணியை நிறுத்த குறிப்பாணை வழங்கிய பிறகும் கட்டட அனுமதியின்படி திருத்தம் மேற்கொள்ளாத 1124 கட்டுமான இடங்களில் கட்டுமானப் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, கட்டட உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டடங்களை கட்ட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைப்பதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.