மதுரையில் அண்ணா சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

 
ttn

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

tn

திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவரும்,  மறைந்த முன்னாள் முதல்வருமான அண்ணாதுரையின் 114 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர், தமிழ் மொழி உயர்வுக்காக, தமிழர்களின் மேம்பாட்டுக்காக, தமிழ்நாட்டின் சிறப்புக்காக வாழ்நாளெல்லாம் ஓயாது பாடுபட்டவர் அண்ணாதுரை.  கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.  இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று திமுக தொண்டர்களை பெரும்படையை கண்டு நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் சி.என். அண்ணாதுரை.  மெட்ராஸ் ஸ்டேட்  என்னும் பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து, புத்துயிர் கொடுத்தவர். தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவராகவும். மிகப்பெரும் ஆளுமையாகவும் வலம் வந்தவர் அண்ணாதுரை.

tn

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 114 வது பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  அண்ணாதுரையின் பிறந்த நாளை ஒட்டி மதுரையில் நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தம்பி! உன்னைத்தான் தம்பி..." என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் - ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் - நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்! என்று பதிவிட்டுள்ளார்.