ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 

திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து  ஆறுதல் தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின்  மகன்,  திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 5-ம் தேதி மாரடைப்பால் காலமானார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவெராவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தார்.  சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அவர் பதவி வகித்த ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.  இதற்கிடையே,  அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக,  மகனை இழந்து வாடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நேரில் சந்தித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், தாமோ அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  மேலும் முன்னதாக  ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் போட்டியிட போவதில்லை என்றும்,  காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு அளித்தால்,  இடைத்தேர்தலில் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை  போட்டியிடச் செய்வேன் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.