கோடிக்கணக்கில் மோசடி- IFS உள்ளிட்ட 6 நிதி நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

 
IFS

பொது மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கில், ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனம் உள்பட ஆறு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள், ஊழியர்களுக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Highcourt

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு ‘இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்’ என்கிற ஐ.எப்.எஸ். நிறுவனத்திற்கு, வேலுார், காஞ்சிபுரம், சென்னை என மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் கிளைகள் செயல்பட்டு வந்தன. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு, 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாகக்கூறி, 6000 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளது.

உறுதி அளித்தப்படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி தொகையை வழங்காததால், இந்த நிறுவனம் மீது, முதலீட்டாளர்கள் 200 பேர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்படி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தினர். அதில், தங்கம், ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பண மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குனர் மோகன்பாபு, நிர்வாகிகளான சரவணகுமார், குப்புராஜ்,  ஜெகனநாதன் உள்ளிட்டோரை  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை 'டான்பிட் நீதிமன்றம்' என அழைக்கப்படும்  நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், மோசடியில் தொடர்புடைய ஐ.எப்.எஸ்., மார்க் ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் உள்பட ஆறு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் 13 பேருக்கு எதிராக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.கருணாநிதி முன் தாக்கல் செய்துள்ளனர்.


அதில்,200 சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ள உள்ள 56.82 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்; 12.23 கோடி ரூபாய் மதிப்பிலான 72 சொத்துகள், 29.23 லட்ச ரூபாய் ரொக்கம், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மோசடியில் தொடர்புடைய ஆறு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள், நிர்வாகிகள் 13 பேர் பெயர்கள் ஆகியவை குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.