வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

 
rain

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய புவி அறிவியல் துறை முன்னாள் செயலாளர் மாதவன் ராஜீவன் தெரிவித்துள்ளார். 
 
தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது எனவும் அது வரும் 14ஆம் தேதி வடக்கு திசையில் வங்காளதேசம் நோக்கி நகர்ந்து செல்லக்கூடிய சாதகமான நிலை இருப்பதாகவும் இதனால் இந்திய கடலோர பகுதிகளுக்கு எந்த வகையான பாதிப்பும் இல்லை எனவும் இந்திய புவி அறிவியல் துறை முன்னாள் செயலாளர் மாதவன் ராஜீவன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கக்கூடிய சாதகமான நிலை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 


இதனிடையே தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி,  திண்டுக்கல், ஈரோடு,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் சமயத்தில் தரை காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.