ஜல்லிக்கட்டில் தரமற்ற தங்கக்காசு கொடுப்பதாக காளை உரிமையாளர்கள் புகார்

 
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் தரமற்ற தங்கக்காசு வழங்கப்படுவதாக ஜல்லிக்கட்டு போட்டி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மாட்டின் உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் விழா கமிட்டியினர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அப்போது காளை உரிமையாளர் பேசிய போது, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வழங்க கூடிய தங்க காசுகள் தரமற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டினா். இதனால்  சிறிதுநேரம் வாக்குவாதம் நடைபெற்றது. 

இதனையடுத்து பேசிய அமைச்சர் இந்த ஆண்டு தங்க காசு பரிசுகளை பெறும் போது தரச்சான்று பெற்ற தங்க காசுகளை வழங்குவோம் என பதிலளித்தார், இதனையடுத்து பேசிய மாடுபிடி உரிமையாளர்கள் போட்டியில் காளைகளை அவிழ்க்கும் போது காளை உரிமையாளர்களின் பெயரை குறிப்பிடும் போது சாதி பெயர்களை கூற அனுமதி அளிக்க கூடாது எனவும், காளை உரிமையாளரின் பெயரை மட்டும் வாசிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்து பாதுகாப்பு வேலிகள் அமைப்பது, குடிநீர் , கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம், காளைகளுக்கான பாதுகாப்பு, வீரர்களுக்கான உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர், கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் , பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடிய காளைகள் வரிசையில் நிறுத்தி வைக்கும்போது காளைகள் வெயிலில் நிறுத்தாமல் இருக்கும் வகையில் நிழற்பந்தல்கள் முழுவதுமாக அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.