பெட்ரோல் உயர்வுக்கு காரணம் மோடி தானே? என கேள்வி கேட்டவரை துரத்தி சென்று தாக்கிய பாஜகவினர்

 
protest

பொன்னேரியில் பாஜக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணம் பிரதமர் மோடி தானே என கேள்வி எழுப்பிய நபரை பாஜகவினர் துரத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bjp 1

திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ள தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்திற்கு வந்த ஒருவர் பெட்ரோல், டீசல் விலை எல்லாம் உயர்ந்து விட்டது, அதற்கு காரணம் மோடி அரசாங்கமே, அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது தானே என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. 

அதனைக் கண்ட பாஜகவினர் ஆத்திரமடைந்து அந்த நபரை தாக்க முற்பட்டனர். உடனடியாக காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரை மீறி அந்த நபரை துரத்திச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி பாஜக நிர்வாகி ஒருவர் தாக்கினார். தொடர்ந்து அவரை மீட்ட காவல்துறையினர் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.