அந்தியூர் திமுக எம்.எல்.ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்து - தீவிர சிகிச்சை

 
MLA

ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக எம்.எல்.ஏ. சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில், இதில் படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ஏஜி வெங்கடாசலம், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆந்தியூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இவர் தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நல வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார். இதனிடையே சென்னையில் இன்று மாலை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்றி நள்ளிரவு அந்தியூரில் இருந்து பவானி வழியாக ஈரோட்டிற்கு காரில் வந்துகொண்டிருந்தார். 

accident

அப்போது பவானி அருகே வாய்க்கால் பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அந்த பகுதியில் மழைபெய்துகொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் மற்றும் எம்,எல்.ஏ. ஏஜி வெங்கடாசலம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருவரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் ஏஜி வெங்கடாச்சலத்திற்கு பலத்த அடி பட்டுள்ளதால மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சட்டமன்றத் உறுப்பினர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.