ஆ.ராசாவின் கருத்தை ஆதரிக்கிறார்களா? அனைவரையும் மதம் மாற வலியுறுத்துகின்றீர்களா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

 
annamalai mkstalin

திராவிட மாடலை முன்னெடுக்க, தமிழர் அடையாளத்தை அழிக்கும் சூழ்ச்சி, தமிழரை இழிவு செய்தல் உம் மதமா? மௌனம் காப்பதால் சம்மதமா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

K Annamalai, திமுகவை சீண்டிய அண்ணாமலை - டென்ஷனான மு.க.ஸ்டாலின்! - tamil  nadu bjp president k annamalai strongly criticized mk stalin led dmk govt -  Samayam Tamil

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க. துணைப் பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா கண்ணியமற்ற முறையில், தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாக பேசியது குறித்து, மொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக இருப்பவர், தொடர் மௌனம் சாதிப்பது, சந்தர்ப்பவாதமாக, பிரித்தாளும் சதியாக பார்க்கப்படுகிறது.
“இந்துவாக இருக்கும் வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன்" என, ஆ.ராசா பேசியது குறித்து, தி.மு.க.வின் நிலை என்ன? திமுகவின் குரலாக வந்திருக்கும், ஆ ராசாவின் பேச்சை உங்கள் மௌனம் ஆதரிக்கிறதா? வரவேற்கிறதா? மௌனமாக ரசிக்கிறதா?

திராவிட மாடலை முன்னெடுக்க, தமிழர் அடையாளத்தை அழிக்க, எடுக்கும் முயற்சி தானே, ஆ.ராசாவின் பேச்சு. அவரது நோக்கம், தமிழரைப் பிளவுப்படுத்தி, திராவிடத்தை நிலைநிறுத்தி, மதமாற்றத்திற்கு பாதை அமைத்துத் தருவதுதான் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாதஉண்மை. திமுகவின் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் இது வெளிப்படையாகத் தெரியும்
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான தமிழ் மக்கள் அனைவரின் மனதையும், புண்படுத்தும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பேச்சுக்கு வருத்தமும் தெரிவிக்காத ஆ.ராசா, தான் பேசியது சரிதான் என, மீண்டும் பேசியிருக்கிறார். இதனால் தி.மு.க. கூட்டத்தில் பேசிய ஆ.ராசாவின் பேச்சு முதல்வரின் ஆசியுடன் தான் பேசப்பட்டது, என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. தொடரும் உங்கள் மௌனம் அதை நிரூபிக்கிறது. திமுக குடும்ப ஆட்சியின் வாரிசு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு போன்றவர்கள், உங்கள் கட்சியில்  90% உறுப்பினர்களாக இருக்கும், இறை நம்பிக்கையுள்ள அனைவரையும் உள்ளடக்கி, விபச்சாரியின் குழந்தைகள் என்று கூக்குரலிட்ட ஆ.ராசாவின் கருத்தை ஆதரிக்கிறார்களா? அனைவரையும் மதம் மாற வலியுறுத்துகின்றீர்களா?

தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் திமுகவின் செயலை, எதிர்த்து குரல் கொடுக்கும்,பாஜக உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள மக்களை கைது செய்யும், காவல்துறையின் அடக்குமுறையால் மிரட்டல் விடுவதன் தமிழகம் முழுவதும் தலையெடுக்கும் போராட்டத்தைத் தடுக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒரு அமைதி புரட்சிக்கு, கனத்த இதயத்துடன், உறுதியான லட்சியத்துடன் , மதவெறி திமுகவை  ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்ற சத்திய உணர்வுடன், அறவழியில், அஹிம்சை போராட்டதை துவங்கி விட்டார்கள். அதன் வலிமையை வருகின்ற தேர்தலில் உணர்வீர்கள். ஆ.ராசாவின் ஆபாச பேச்சினை ஆவலுடன் அங்கீகரிப்பது போல் நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் திமுகவின் கோர முகத்தை மக்கள் அறிந்து கொண்டதால், புரிந்து கொண்டதால்தான், உண்மையான தமிழ் உணர்வுடன், திராவிடத்தை எதிர்த்து  நீலகிரி மக்களவைத் தொகுதியில் நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. மாட்சிமைமிக்க நீதிமன்றங்கள் இருக்கின்றன. 

உங்கள் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத நேர்மையான நீதிபதிகள் இருக்கின்றார்கள். தங்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் தலைக்கனத்துடன் பொய் வழக்குகள் மூலம் எடுக்கப்படும் தமிழக அரசின் கைது நடவடிக்கைகளை மத்திய அரசும் கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்காக, அவர்களின் தன்மானத்திற்காக, உரிமைக்காக குரல் கொடுக்கும் பாஜக தொண்டர்களை கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்பதை, திமுகவின் ஏவல் துறையாக செயல்படும் காவல் துறையும், தலைக்கனத்துடன் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும். இனி  வரும் 26ஆம்தேதி கோவையில், தொடங்கும், பாஜக முன்னெடுத்து, நடைபெற இருக்கும், அறவழி விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம், மக்கள், தி.மு.க.வுக்கு  நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.