சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி - நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என பேட்டி

 
rajini

ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சுதாகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர் சுதாகர் இவர் நீண்ட காலமாக உடல்நலம்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டு இருந்தார். 

இந்நிலையில், அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுதாகர் எனது நீண்டகால நண்பர். என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால், அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் பேசினார்.