தூக்கு தண்டனைக்கு பயந்து இறந்ததாக நாடகமாடிய குற்றவாளி

 
arrested

திருவண்ணாமலை அடுத்த மேல் பாலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர் அதே கிராமத்தில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். இவர் தனது தொழிலுக்காக கிராமத்தில் உள்ள பல்வேறு நபர்களிடம் இடம் கடன்பெற்று தொழில் நடத்தியதாக கூறப்படுகிறது.

மணிகண்டன்

தொழிலில் ஏற்பட்ட  நஷ்டத்தின் காரணமாக செய்வதறியாமல் கிராமத்திற்குள் சுற்றி வந்த மணிகண்டன், தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஐந்து வயது  சிறுமியை கடந்த 2014 ஆம் ஆண்டு கடத்தி சிறுமியின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து கடத்தப்பட்ட சிறுமியை கொலை செய்து கிணற்றில் மணிகண்டன் வீசி விட்டு தப்பித்து சென்றார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மணிகண்டனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு குறித்து மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் இதனை உடனடியாக சிபிஐ விசாரணை செய்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கிடையே ஆறு மாதத்திற்கு பிறகு மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் வழக்கானது திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இரண்டு ஆண்டுகளாக வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மணிகண்டன் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டு விசாரணை அறிக்கையை திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 2ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதை அறிந்த மணிகண்டன் தனது நண்பர்களோடு இணைந்து பாபநாசம் பட பாணியில் திட்டம் தீட்டி உள்ளார். கொலை செய்துவிட்டு தலைமறைவாவது எப்படி குறித்து யூடிபில் தேடிய மணிகண்டன் தனது நண்பர்களான சத்தியராஜ், மற்றும் பாண்டியராஜ் ஆகியோருடன் இணைந்து தப்பிப்பது குறித்து தீவிரமாக திட்டம் தீட்டி கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தனது கிராமத்தில் உள்ள அனைவருடனும் சகஜமாக பழகிவிட்டு நான் இன்று இரவு மங்களத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்கச் செல்வதாக அனைவரிடமும் கூறிவிட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி தியேட்டர் டிக்கெட் கொடுப்பவர் முதல் பாப்கான் விற்பவர் வரை அனைவரிடமும் தான் தியேட்டரில் இருப்பதாக கூறிவிட்டு, அனைவரிடமும் வேண்டுமென்றே பேசிக் கொண்டும் பின்னர் பாப்கானை வாங்கிக்கொண்டு தியேட்டரை விட்டு திட்டம் தீட்டியது போல் வெளியேறினார்.

மங்கலத்தில் இருந்து பாலானந்தல் செல்லும் வழியில் தனது உடம்பில் இருந்து 400 மில்லி இரத்தத்தை எடுத்துள்ளார். சத்யராஜ் ஏற்கனவே மருத்துவமனையில் பணி செய்த அனுபவம் இருந்ததால் எடுக்கப்பட்ட ரத்தத்தை முறையாக உரையாமல் பதப்படுத்தி வைத்துள்ளார். 35 லிட்டர் டீசல் கேனுடன் இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திற்கு எடுத்துச் சென்ற மணிகண்டன் தனது இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது போல் விபத்து ஏற்படுத்தி விட்டு பின்னர் கையில் கொண்டு சென்ற ரத்தத்தை அங்கு பல்வேறு இடங்களில் ஊற்றி விட்டதுடன், அங்கிருந்த வைக்கோல் போரையும் டீசல் ஊற்றி கொளுத்தி விட்டு தனது செல்போன், வாட்ச், பர்ஸ் உள்ளிட்டவைகளை அங்கேயே எரியும்படி நாடகத்தை  அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார். மறுநாள் அக்டோபர் 30 ஆம் தேதி மங்கலம் காவல்துறையினர் மணிகண்டனின் மனைவி ஷர்மிளாவை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றபோது தனது கணவருடைய இருசக்கர வாகனம் வாட்ச் உள்ளிட்டவைகளை அடையாளம் காண்பித்தார். ஆனால் அந்த இடத்தில் பிரேதம் இல்லாததாலும், மனித எலும்புகள் இல்லாததாலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் குணசேகரன் மங்களம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் தனிப்படை அமைத்து கடந்த 15 நாட்களாக தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அதில் மணிகண்டன் தண்டனைக்கு பயந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனது உறவினர் சரத்குமார் வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று இரவு மணிகண்டன், சரத்குமார் அவருக்கு உடந்தையாக இருந்த சத்தியராஜ் பாண்டியராஜ் ஆகியோரை ஆரணியில் கைது செய்து மங்களம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.