தந்தையின் கண்முன்னே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்

 
puduchery accident

புதுச்சேரியில், இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த 10 வயது சிறுவன் தந்தையின் கண்முன்னே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி பாவணன் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு 10 வயதில் கிஷ்வந்த் என்ற மகன் இருந்தான். கிஷ்வந்த் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில், தந்தை பன்னீர்செல்வம் தனது மகனை இருசக்கர வானத்தில் தினமும் பள்ளியில் கொண்டு சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். வழக்கம் போல் பன்னீர்செல்வம் தனது மகன் கிஷ்வந்தை பள்ளிக்கு சென்று விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பவழம் சாவடி அருகே சென்றுகொண்டிருந்த போது எதிர்திசையில் வாகனம் ஒன்று வருவதை பார்த்த பன்னீர்செல்வம் திடீரென வேகத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையில் சரிந்த நிலையில், இருவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று சிறுவன் கிஷ்வந்தின் மீது ஏறி இறங்கியது. இதில் கிஷ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 10 வயது சிறுவன் தந்தையின் கண்முன்னே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.