ஆ.ராசாவின் கருத்து நியாயமானது.. அவருக்கு பக்க பலமாக நிற்போம் - சீமான்..

 
seeman


மனுதர்மத்தைச் சாடியதற்காக, ஆ.ராசாவைக் குறிவைத்து  மதவாதிகள் தாக்குதல் நடத்துவதை  அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் , “மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசாவைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச் சீற்றத்தோடு முன்வைத்த ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்க பலமாகத் துணை நிற்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தத் தொன்மப் பெருமைகள் பல வாய்ந்த தமிழர் எனும் தேசிய இனத்தின் மக்கள் நாங்கள். தமிழர்களின் வாழ்வியல் இலக்கணமே அறநெறிதான். அது சமத்துவத்தையும், சமதர்மத்தையுமே அடிப்படையாகக் கொண்டது.    சாதியக்கட்டமைப்பும், வருணாசிரமக்கோட்பாடுகளும் தமிழர்களின் அறநெறிக்கு மட்டுமல்லாது, இறைநெறிக்கும் எதிரானது என்பதை உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும். முற்காலத்திலேயே நாகரீகமடைந்து, நிலங்களைத் திணைகளாகப் பகுத்து, வாழ்வியலை அகவாழ்க்கை, புறவாழ்க்கையெனப் பிரித்து, அவற்றிற்கு தனியொரு இலக்கணம் வகுத்து, அதற்கு அடிப்படையாக அறநெறியை வைத்து, வாழ்வாங்கு வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூகத்தின் மீது நிகழ்ந்தேறிய ஆரியப்படையெடுப்பினால் மற்ற மொழிவழித் தேசிய இனங்களைப் போலவே, தமிழ்த் தேசிய இனமும் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது.

 ஆ.ராசாவின் கருத்து நியாயமானது..  அவருக்கு பக்க பலமாக நிற்போம் - சீமான்..

ஆதியில் தாய்வழிச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு, சங்கக் காலத்திலேயே பெண்பாற் புலவர்களைக் கொண்டிருக்கிற அளவுக்கு பெண் கல்வியில் சிறந்து விளங்கி, முற்போக்கோடு திகழ்ந்த தமிழினத்தில் பெண்களுக்குரிய தலைமையும், முதன்மைத்துவமும் ஆரியச் சூழ்ச்சியினால் இடைக்காலத்தில் பறிக்கப்பட்டது. வெள்ளையர் இயற்றியச் சட்டத்தின் உதவியோடு, தமிழர்களுக்குச் சூத்திர (வேசி மக்கள்) பட்டத்தைச் சூட்டி, மனு தர்மத்தை நிலைநிறுத்த எந்த இந்து மதத்தைப் பயன்படுத்திக்கொண்டார்களோ, அந்த மதத்தைத் தோலுரித்து தமிழர்கள் மீதான இழிவைப் போக்கவே ஆ.ராசா  தனது இனமானக்கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழர்கள் மீது சுமத்தப்பட்ட சூத்திரரெனும் (வேசி மக்கள்) பழிச்சொல்லை நீக்கவே, இந்துக்களாக இருந்தால் இழிமகன்களாகிப் போவோமெனக் கூறி, அவற்றிலிருந்து விடுபடச்சொல்கிறாரே ஒழிய, தனிப்பட்ட எவரையும் அவர் இழித்துரைக்கவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.