கடலூர் மாநகராட்சியில் காணாமல் போன 70 குப்பை வண்டிகள்! அதிர்ச்சியில் மேயர்

 
வண்டி

கடலூர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட 130 வாகனங்களில் 60 வாகனங்கள் மாயமானது ஆய்வில் கண்டறியப்பட்டு உடனடியாக அவை ஒப்படைக்கப்படவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இவற்றில் குப்பைகள் பெரும்பாலான இடங்களில் அகற்றப்படவில்லை என பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து இன்று மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் முறையாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறதா என கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அனு ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குப்பை வாகனங்கள் குறைந்த அளவில் இருந்ததால் ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். அதில் முறையான பதிலளிக்காத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை சேகரிக்க வழங்கப்பட்ட 130 வாகனங்களில் 60 வாகனங்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. 

வாகனங்கள் எங்கே என்று கேட்டபோது ஒப்பந்ததாரர் முறையாக பதில் அளிக்காததால் மேயர் அவர்கள் நாளைக்குள் மாயமான 60 வாகனங்கள் வரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மாநகராட்சி வாகனங்கள் காணாமல் போன சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.