கூண்டோடு இடமாறுதல்... ஆசிரியர்களே இல்லாத அரசுப்பள்ளி!

 
கூண்டோடு இடமாறுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள காசிம் புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியிட மாறுதல் பெற்று சென்றதால் ஆசிரியர்களின்றி அப்பள்ளியில் பயிலும் 111 மாணவர்கள் தவிக்கின்றனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள காசிம் புதுப்பேட்டையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு வரை ஏழு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் 184 மாணவர்கள் கல்வி பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏழு ஆசிரியர்களில் மூன்று ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் அப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இந்நிலையில்தான் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 111ஆக குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பள்ளியில் பணிபுரிந்த நான்கு ஆசிரியர்களில் ஏற்கனவே ஒரு பட்டதாரி ஆசிரியர் மாற்றுப் பணிக்கு சென்ற நிலையில் மூன்று ஆசிரியர்கள் மட்டும் அப்பள்ளியில் பயிலும் 111 மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளனர். 

இந்நிலையில்தான் தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வில் அப்பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் அவர்கள் விருப்பப்பட்ட பள்ளிக்கு கடந்த வாரத்தில் பணி மாறுதல் பெற்று சென்ற நிலையில் பள்ளியில் பயிலக்கூடிய 111 மாணவர்களும் பாடம் கற்பித்துக் கொடுக்க ஆசிரியர்கள் இன்றி தவித்து வந்தனர். இந்நிலையில்தான் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க பள்ளி மேலாண்மை குழு சார்பில் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களை வைத்து அப்பள்ளியில் பயிலும் 111 மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் ஒரே நேரத்தில் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் பணி மாறுதல் பெற்று சென்றது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதே நேரத்தில் பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் ஏற்கனவே பணிபுரிந்து வந்த நிலையில் இந்த ஆண்டு நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்ததால் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததாகவும் மேலும் இதுகுறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைவில் நிரந்தரமாக போதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய அப்பகுதியினர் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் உட்பட ஒட்டுமொத்த ஆசிரியர்களும் பணி மாறுதல் கலந்தாய்வில் அவர்கள் விருப்பப்பட்ட பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களின்றி தவித்து வந்த நிலையில் இன்று கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுப் பணியில் நான்கு ஆசிரியர்களை நியமிக்கப்பட்டு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளிக்கும் போதிய நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.