நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை : தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு..

 
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை : தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு..


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த  முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரலாற்று  சிறப்பு மிக்க இந்த தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்..  

ops

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , “முன்னாள் பாரதப் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட திரு.பேரறிவாளனை தொடர்ந்து, சுரேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அஇஅதிமுக இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.  

இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்!” என்று கூறியுள்ளார்..  

TTV

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி.அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி. ரவிச்சந்திரன்.முருகன். சாந்தன்.ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்.ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்துள்ள உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்..   

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : “பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.