மோடி சென்னை வருகை - 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

 
police

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதையொட்டி, சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 44வது  உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும்.   இதில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.  செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருந்தாலும், அதன்   தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.  ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

modi

இதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி சென்னை வருகிறார். மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பிரதமரின் 2 நாள் பயணத்தையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேரு ஸ்டேடியம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. மத்திய, மாநில போலீசாரின் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் முதல் நேரு ஸ்டேடியம் வரையும், கவர்னர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரையிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 28, 29 ஆகிய 2 தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.