குடியரசு தின விழா - சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

 
covai airport

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 30ம் தேதி நள்ளிரவு வரை பாதுகாப்பு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்பகுதிகளில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணி, முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல விமான நிலையத்தினை சுற்றிலும் 24 மணிநேரமும் ரோந்து பணி மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. குடியரசு தினத்தையொட்டி பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன.