சுற்றுலாக்கு வந்த இடத்தில் தற்கொலை! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் பலி
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் கொத்தனார் வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (70). இவர் மனைவி சரஸ்வதி. இவரது மகள் சவுந்தர்யா. மகன் சுதர்சன். சந்திரசேகர் நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7ம் தேதி சுற்றுலாவுக்கு புதுச்சேரி வந்தனர். முத்துமாரியம்மன் கோயில் வீதியிலுள்ள விடுதியில் தங்கினர். 8ம் தேதி இரவு புறப்படுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மதியம் வரை கதவை திறக்கவில்லை. பெல் அடித்தும் போன் செய்தும் பதில் இல்லை. இதனால் லாட்ஜ் நிர்வாகம் புதுச்சேரி பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையில் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, நால்வரும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருந்தனர்.
சுதர்சன் பெயரில்தான் விடுதி பதிவு செய்யப்பட்டிருந்தது. உறவினர்களை புதுச்சேரிக்கு போலீஸார் வரசொல்லி உள்ளனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு உடலங்களை போலீஸார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தற்கொலை கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இன்னும் வெளியிடவில்லை. அதன்பிறகே இறந்ததற்கான காரணம் தெரியவரும்.