சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு

 
பிரிவினை மத அரசியலை தவிர்த்திடுவோம்! – சீமான் வேண்டுகோள்

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் சீமான்  தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாத இடங்களில் பிரசாரம் செய்ததற்காக நேற்று ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

seeman

பிப்ரவரி 5.ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இரண்டாம் நாளாக நேற்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே பிரச்சாரத்தை தொடங்கி மரப்பாலம் கச்சேரி சாலை மண்டபம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை கூட்டங்களில் உரையாற்றினார்.

இந்நிலையில் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காளை மாட்டு சிலை அருகே பிரச்சாரம் செய்ததற்காக சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 35 பேர் மீது தேர்தல் விதிமீறல் சட்டப்பிரிவு பிஎன்எஸ் 174 மற்றும் அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல் BNS 132 ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மரப்பாலம் மற்றும்  EVKS இளங்கோவன் வீடு அருகே மண்டபம் வீதி ஆகிய இடங்களில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததற்காக தேர்தல் விதிமீறல் பிரிவுடன் சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது ஈரோடு நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

seeman

இதேபோல் நேற்று மாலை ஈரோடு பெரியார் நகரில் அனுமதி இன்றி பிரச்சாரம் செய்ததற்காக சீமான் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தேர்தல் விதி மீறியதாக சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது ஒரே நாளில் நான்கு வழக்குகள் ஈரோடு நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.