நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 30 தமிழர்களும் மீட்பு.. தாயகம் அழைத்துவர ஏற்பாடு..
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 18 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என 30 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதை தாண்டிய முதியவர்கள். இவர்கள் ஆதி கைலாஷ் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தாயகம் புறப்பட்டுள்ளனர். தவாகாட் என்ற சிறிய கிராமத்திற்கு அருகே வந்தபோது, அவர்கள் கண்ணெதிரிலேயே மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு சாலை அடைபட்டது. இதனால் எந்த பக்கமும் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்சொல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி உத்தரகாண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணியில் இறங்கினர். உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு அவர்களது பாதுகாப்பை உறுதி செய்த பின்னர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்டு தாயகம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். அதன்படி ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஒரு முறைக்கு 5 பேர் வீதம் முதல்கட்டமாக 15 பேர் மீட்கப்பட்டனர்.
இதனிடையே நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் தவித்த தமிழர்களிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விசாரித்தார். தைரியமாக இருங்கள், அனைவரையும் பத்திரமாக மீட்டு தமிழ்நாடு அழைத்துவர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதலமைச்சர் உறுதியளித்தார். தொடர்ந்து மீதியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 30 தமிழர்களும் தனி விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.