3 வயது குழந்தைக்கு எமனான பிஸ்கட்!
கும்மிடிப்பூண்டி அருகே தேநீருடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது சிறுமி புரை ஏறி மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் - அமுலு தம்பதியர். இவர்கள் கூடை முடையும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களது 3 வயது பெண் குழந்தையான வெங்கடலட்சுமி தேகலாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தேநீருடன் (டீ) பிஸ்கட் சேர்த்து சாப்பிட்டுள்ளார். அப்போது சிறுமிக்கு புரையேறி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கவரைப்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்து சென்று பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்குன்றம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கவரைப்பேட்டை போலீசார், சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டீயுடன் பிஸ்கட் சேர்ந்து சாப்பிட்ட சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.