"தடுப்பூசி போடலேனா 3.5 மடங்கு அபாயம் அதிகம்" - பொதுச்சுகாதாரத் துறை எச்சரிக்கை!

 
கொரோனா தடுப்பூசி

கொரோனா இரண்டாம் அலை தற்போது ஓரளவு ஓய்ந்துவிட்டது. எனினும் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவை 3ஆம் அலை தாக்கலாம என்ற அச்சுறுத்தல் நிலவி வருகிறது. ஆகவே அதற்கெதிராக தடுப்பூசி போடப்படும் பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுள்ளது. கடந்த இரு மாதங்களாக வாரவாரம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர்.

Covid Questions: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படுவது  ஏன்? | why people turn positive to covid even after taking vaccines
 
ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் ஒருசிலருக்கு இன்னும் அதன் மீதான தயக்கம் அகலவில்லை. இது பெரும் அபாயத்தில் விட்டுவிடும் என சுகாதாரத் துறை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் திடுக்கிடும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 3.5 மடங்கு ஆபத்து என சொல்லப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் மொத்தம் 2,011 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் 1,675 பேர் தடுப்பூசி செலுத்தாத நபர்கள்தான். 84 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் இறந்துள்ளனர் என அந்த ஆய்வு கூறுகிறது. அதேபோல ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 9 சதவீதம் பேரும் 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களில் 4 சதவீதம் பேரும் மரணித்திருக்கிறார்கள்.