தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு! புதுச்சேரியில் சோகம்
புதுச்சேரி அடுத்த நெட்டபாக்கத்தில்,குழந்தை இறப்பு விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அடுத்த நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் புதுக் காலனி பகுதியை சேர்ந்தவர் அருண் ( வயது 28). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நதியா. இவர்களுக்குக் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அனுஷ் என்று பெயரிட்டனர்.இந்த நிலையில் குழந்தைக்கு கடந்த 4ந் தேதி நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2-வது தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டதில் இருந்து குழந்தை காய்ச்சல் மற்றும் சோர்வாக இருந்தது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த செவிலியர் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
தாய்ப்பால் கொடுத்து மீண்டும் செவிலியரிடம் காண்பித்தபோது குழந்தை நலமாக உள்ளது என கூறி வீட்டுக்கு சென்று மீண்டும் வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து வீட்டுக்கு சென்ற குழந்தைக்கு இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் உடனடியாக மீண்டும் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த மற்றொரு செவிலியர் குழந்தையை சோதித்துவிட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து குழந்தையை மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை அருண் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சிய போக்கால்தான் குழந்தை இறந்தது என கூறி குழந்தையின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மடுகரை-புதுச்சேரி சாலையில் நெட்டப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். சுகாதாரத்துறை இயக்குநர் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


