171 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி - இபிஎஸ் அறிவிப்பு..
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைப்போர் திருநாளாம் ‘மே’ தினத்தைமுன்னிட்டு அதிமுக அண்ணா திழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் இதய தெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மே தினத்தின்போது, நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நன்னடத்தை விதிமுறகள் அமலில் இருந்ததால் அப்போது நிதியுதவி வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில், கழக அமைப்பு நீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும்; போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,00 ரூபாய் வீதம், மொத்தம் 1 கோடியே 71 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும். இதற்காக பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
இவர்களுக்கான நிதியுதவி, கழகத்தின் 53வது ஆண்டு தொடக்க நாளான 17.10.2024 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.