ரத்தாகிறது திருவாரூர் இடைத்தேர்தல்? தேர்தலை ஒத்திவைக்க அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

 

ரத்தாகிறது திருவாரூர் இடைத்தேர்தல்? தேர்தலை ஒத்திவைக்க அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதில் பதிவான வாக்குகள் 31-ம் தேதி எண்ணப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நிர்மல்ராஜ் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், நிவாரணப்பணிகள் நிறைவடைந்த பிறகு தேர்தலை நடத்தலாம் அனைத்துக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரிக்கு நிர்மல் ராஜ் அனுப்பி வைத்தார். மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்த பிறகு தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என கூறப்படுவதால், திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.