புயல் பாதிப்பை பார்வையிட நாகை சென்றார் முதல்வர் பழனிசாமி

 

புயல் பாதிப்பை பார்வையிட நாகை சென்றார் முதல்வர் பழனிசாமி

கஜா புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி ரயில் மூலம் நாகப்பட்டினம் சென்றடைந்தார்.

நாகை: கஜா புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி ரயில் மூலம் நாகப்பட்டினம் சென்றடைந்தார்.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.இதனால் அம்மாவட்ட மக்கள் அடிப்படை வசதியின்றி அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் அளித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசு கஜா புயல் பாதிப்புக்கு ரூ 15,000 கோடி ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் முதற்கட்டமாக ரூ 200 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்திய குழுவினர் 3 நாட்களாக ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதிப்பை ஆய்வு செய்தனர். ஆனால் மோசமான வானிலை எனக்கூறி முதல்வர் பழனிசாமி, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியிலேயே திரும்பினார். அவரது இந்த செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை பார்வையிட முதல்வர் பழனிசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டு இன்று (புதன்கிழமை) காலை சென்றடைந்தார்.

நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களையும், நிதியுதவிகளையும் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து, திருவாரூரிலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர், திருவாரூரில் இருந்து புதன்கிழமை இரவு ரயில் மூலமாக சென்னை திரும்புகிறார்.