ஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்க! – வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ஜெயலலிதா சொத்து விவரங்களை தாக்கல் செய்க! – வருமானவரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக உள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்கி அவற்றை பராமரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

sasikala

இதற்கிடையே, ஜெயலலிதா பெயரில் உள்ள ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக பிரமுகர் புகழேந்தி தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற போது, ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக் ஆகியோர் உள்ளதால் இதுகுறித்து அவர்கள் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிப்பதா? அல்லது ஜெயலலிதா தனது வேட்பு மனு தாக்கலின்போது கணக்கு காட்டி இருந்த சொத்துக்களுக்கு மட்டும் நிர்வாகியை நியமிப்பதா? என்றும் மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த இரண்டு வகையான சொத்து விபரங்களையும் ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

highcourt

இந்நிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், ஜெயலலிதாவின் மொத்த சொத்து விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியாத நிலை நீடிப்பதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜெயலலிதாவின் சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை மற்றும் பொருளாதார அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.