கஜா புயல்; முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை

 

கஜா புயல்; முதல்வருடன் மத்திய குழு ஆலோசனை

கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் தலைமை செயலகத்தில் மத்திய குழு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.

சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் தலைமை செயலகத்தில் மத்திய குழு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.

கஜா புயல் புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. மக்கள் அனைவரும் வீடின்றி, உணவின்றி, உடையின்றி பரிதவித்து வருகின்றனர். ஏறத்தாழ ரூ 10,000 கோடி அளவில் கஜா சூறையாடி சென்றிருக்கிறது. இதனையடுத்து தமிழக அரசு ரூ 1,000 கோடி நிவாரணத்தொகை ஒதுக்கியுள்ளது. மேலும் மத்திய அரசிடம் ரூ 15,000 கோடி நிதி கோரியுள்ளது.

இதற்கிடையே கஜா புயல் பாதிப்பை மதிப்பீடு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு, மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இயக்குனர் பி.கே.ஸ்ரீவத்சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு நேற்று சென்னை வந்தடைந்தது. 

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய குழு ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்கள் மத்திய குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதனையடுத்து இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் மத்திய குழுவினர், அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர்.அதன் பிறகு 25, 26-ம் தேதிகளில்  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.