தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம்: டி.கே.சிவக்குமார்

 

தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம்: டி.கே.சிவக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து நேற்று மாலை தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் மேகதாது அணை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் நேற்று மேகதாது திட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவுக்கு நேரில் சென்று அணை கட்ட உள்ள இடத்தை பார்வையிட உள்ளேன். என்னுடன் பத்திரிகையாளர்களையும் அழைத்து செல்கிறேன். நீர்ப்பாசனத்திற்காக நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை. குடிநீர் பயன்பாடு மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் இதன் நோக்கம். மேகதாது பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் இல்லை.

கர்நாடக எல்லைக்குள் எங்கள் நிலத்தில் தான் அணை கட்டுகிறோம். நிலம், இதற்கு செலவிடப்படும் நிதி அனைத்தும் கர்நாடகத்திற்கு சொந்தமானது. வேறு எந்த மாநிலம் மீதும் கர்நாடகத்திற்கு விரோதம் இல்லை. அதனால் தமிழகம் கோபப்பட வேண்டியது இல்லை. இதில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் என்றார்.