தண்ணீர் பிரச்சனை தீர வழிகாட்டும் அத்திவரதர் | கவனிக்குமா தமிழக அரசு?

 

தண்ணீர் பிரச்சனை தீர வழிகாட்டும் அத்திவரதர் | கவனிக்குமா தமிழக அரசு?

முன்புக்கும் முன்பு தமிழகத்தின் நீர் ஆதாரம் உலகிற்கு சவால் விடுகின்ற வகையில் இருந்தது.  அணைகளும், நீர் வீழ்ச்சிகளும், நதிகளுமாக தமிழகத்தை பசுமையாக வைத்திருந்தன. ஆதி தமிழன் நீர் நிர்வாகத்தின் அத்தனை திறமையானவனாக இருந்தான். அவனுடைய கப்பல் கட்டும் தொழிற்முறை உலகிற்கே சவால் விடும் வகையில் இருந்தது. சிற்பக்கலை, கட்டிடக்கலை, யோக நெறி, போர் முறைகள், ஆட்சிமுறை, மருத்துவம் என்று உலகிற்கே முன்னோடியாக பல துறைகளில் மிளிர்ந்த தமிழனின் நிலை தற்போது பரிதாபமானதாக மாறியிருக்கிறது.

water

இலஞ்சி, ஊருணி, ஏரி, கண்மாய்,கலிங்கு, குட்டம், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குளம், கூவம், கூவல், சிறை, சேங்கை, தடம், தனிக்குளம், தாங்கல், தெப்பக்குளம், திருக்குளம், நீராழி, பொங்கு, பொய்கை, வலயம், வாளி, கிணறு என்று நீர் ஆதாரத்திற்காகவும், விவசாயத்திற்காகவும், இயற்கை சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீரை எப்போதும் நிரந்தரமாக வைத்திருக்கவும் நம் தமிழர்கள் பாதுகாத்து வகுத்து வைத்திருந்தனர். 

பனை மரத்தின் பலனை அடைய வேண்டுமானால், ஒரு தலைமுறைக்கு காத்திருக்க வேண்டும் என்பார்கள். யார் பனை மரத்தை நடுகிறார்களோ, அவர்கள் அதன் பலனை அடைய முடியாது. ஆனால், அவர்களின் சந்ததியினருக்கு அந்த பனை மரம் பொக்கிஷம். அதே போல், நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்த நீர்நிலைகளை ஆதாரமாகக் கொண்டு தான் நாம் இதுநாள் வரையில் பலன்களை அடைந்து வந்தோம். வரும் சந்ததியினருக்கு உருவாக்கி வைப்பதற்கு முயற்சி எடுக்காததும், இருப்பதையும் கூட மிச்சம் வைக்காமல் அழித்து வருவது தான் வேதனை.

water

நம் முன்னோர்கள் வைத்துச் சென்ற நீர்நிலைகளில் ஆறு, நதிகளை எல்லாம் வறண்ட மைதானங்களாக மணல் அள்ளி காலி செய்து விட்டோம். மிச்சமிருந்த ஏரி, குளங்களில் எல்லாம் வானை முட்டும் கான்கிரீட் கட்டிடங்களை எழுப்பி, ‘லேக் வியூ’ கட்டிடங்களாக உருமாற்றி விட்டோம். இன்று நம்மிடம் ஆக்கிரமிப்பு எதுவுமின்றி எஞ்சியிருப்பது கோவில் தெப்பக்குளங்கள் மட்டுமே. 

சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் சூப்பர் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளாக வற்றாமல் இருக்கும் அமிர்த சரஸ் திருக்குளத்தில் இருந்து வெளியே வருகிறார். பக்தி பரவசத்தில் பக்தர்கள் குளத்தின் நீரை இறைத்து, அவரை வெளியே கொண்டு வந்திருக்கின்றனர். இதில் அரசாங்கத்தின் உதவி என்று எதுவுமேயில்லையே? 
நீர் முழுவதுமாக நிரம்பி இருக்கின்ற ஒரு குளத்தில், நீரை இறைத்து தூர் வாரி, அத்தி வரதரை பொதுமக்களால் வெளியே கொண்டு வர முடியுமெனில், தற்போது தமிழகம் முழுவதும் பரவி கிடக்கும் கோயில் குளங்களை ஏன் பொதுமக்களால் தூர் வாரி, சுத்தப்படுத்தி மழைக் காலத்திற்குள் செப்பனிட முடியாது. அமைச்சர்களும், அதிகாரிகளும் அத்திவரதரை தரிசிக்க ஸ்பெஷல் தரிசனத்தில் சென்று வர, தமிழகத்தின் குளங்களைத் தூர் வார ஏன் தயங்குகிறார்கள்.

athivardar

நதிகளை இணைப்பவர்களுக்கே ஆதரவு என்று சொல்லும் ரஜினியும், மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பேன் எனும் கமல்ஹாசனும் கூட தங்களது மன்றத்தினரை முடுக்கி விட்டால், முன்மாதிரியாய் தமிழகத்தின் குளங்கள் தூர் வாரப்படுமே?  ஆன்மிகம் நம் வாழ்வோடு கலந்தது தானே? யார் முடிவெடுப்பார்கள்? ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே அதிக அக்கறைக் கொள்ளும் தமிழக அரசு, மக்கள் பிரச்சனையிலும் கொஞ்சம் கவனம் செலுத்துமா? என்று எதிர்பார்க்கிறார்கள் தமிழக மக்கள்.