சின்மயி – வைரமுத்து “மீ டூ”: என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

 

சின்மயி – வைரமுத்து “மீ டூ”: என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

மீ டூ கட்டாயம் நாட்டிற்கு தேவை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

பெங்களூரு: மீ டூ கட்டாயம் நாட்டிற்கு தேவை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

அந்தவகையில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பின்னனி பாடகி சின்மயி ‘மீ டூ’ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா அரங்கிலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும் என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மீ டூ கட்டாயம் நாட்டிற்கு தேவை. எனவே, சின்மயி – வைரமுத்து ஆகிய இருவரும் வழக்கை சந்தித்து தீர்வு காண்பது சிறந்தது என்றார்.

மேலும், டெண்டர் வழக்கில் தன் மீது தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ள தினகரன், சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதில் கேரள அரசு துணை நிற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.