மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து

 

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து

கோவை

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கோயில் உதவி ஆணையர் விமலா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கடந்த 22ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இதனையொட்டி நாள்தோறும் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாளை தைப்பூச திருவிழாவையொட்டி, அதிகலை 3 மணி முதல் 6 மணிக்குள் சுப்ரமணிய சுவாமி, வள்ளி – தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும் எனவும், அதனை தொடர்ந்து, சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோருடன் சிறிய தேரில் வீதி உலா நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என்று கூறியுள்ள அவர், நடப்பாண்டு தைப்பூச திருவிழா தேரோட்ட நிகழ்வு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.இதனையொட்டி இன்று இரவு கோயிலுக்கு பாத யாத்திரை வருபவர்கள் மற்றும் பால்குடம், காவடி உள்ளிவற்றை எடுத்து வரும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.

நாளை திருக்கல்யாண வைபவம் முடிந்து காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் தைப்பூச திருவிழாவையொட்டி, நாளை மலைகோவிலுக்கு கார் மற்றும் இருசக்க வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.