• October
    19
    Saturday

Main Area

Mainபழமுதிர்சோலை: இறையருள் எனும் மெய்யறிவு பெற வணங்கவேண்டிய அற்புத ஸ்தலம்.

palamuthirsolai
palamuthirsolai

அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை என்று அழைக்கப்படும் பழமுதிர்சோலையாகும்.தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார் முருக பெருமான். "அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.

அழகர் மலை என்று வழங்கும் இடம் இரண்டு அழர்களுக்கும் உரிய தலமாக விளங்குகிறது.ஒர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தரராஜப் பெருமாள்,மற்றும் ஒருவர் முருக பெருமான் ஆவார்.சோலைமலை,திருமாலிருஞ்சோலை மலை,திருமாலிருங்குன்றம் என்றும் இந்த திருத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு . 

 

palam

அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை நூபுரகங்கை என்றும் சொல்வர்.திருமாலின் திருச்சிலம்பிலிருந்து உற்பத்தியாகி வருவதாகக் கூறுவர்.இச்சுனை மலை உச்சியிலிருந்து வரும்போது சூரிய ஒளியால் பலவிதங்களில் ஒளிரும். நவரத்தின ஒளியும் இதில் தெரியும்.

திருமாலின் திருவடியை இச்சுனை வருடிக் கொண்டு பாய்வதால், திருமாலின் திருவடிக்குப் பணிசெய்யும் திருமகளைப் போன்றுள்ளது.இதற்குப் போகும் வழியில் முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர்.அதுவே பழமுதிர்சோலை மலையாகிய ஆறாவது படைவீடு என்று நம்பி வணங்கி வந்தனர் .

 எழில்மிகும் இயற்கை இன்பம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. இத்தலம் இடபகிரி (விருஷபகிரி) எனவும் அழைக்கப்படுகின்றது.இங்கு வேல் மூலவராக உள்ள முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு இருபுறமும் வள்ளி,தெய்வானையும் விளங்க நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார்.கல்லால் ஆகிய வேலுக்கு இத்திருக்கோயிலில் தனிச்சிறப்பு உள்ளது.

palamuthir

 மலை ஏறி முருகனை தரிசிப்பதோடு கோயிலின் அருகில் இருக்கும் நாவல் மரத்தையும் தரிசித்து வருகிறார்கள் பக்தர்கள்.ஒளவையாரிடம், 'சுட்ட பழம் வேண்டுமா,சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு,முருகன் அருளாடல் நடத்தியதும் அப்போது அவன் அமர்ந்திருந்ததும் இந்த நாவல் மரத்தில்தான் என்கிறார்கள்.நாவல்மரம், ஏனைய நாவல் மரங்கள் விநாயக சதுர்த்தியின் போது பழுக்கும். இம்மரமோ ஸ்கந்தசஷ்டியின் போது பழுக்கும் இயல்புடையது என்பர் நமது முன்னோர்கள்.

உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள்.அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது.இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த முருகன் சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்த கோயில் தான் பழமுதிர்சோலையாகும்.

 தினமும் காலை 11 மணிக்கு மட்டுமே ஒருகால வழிபாடு நிகழ்கின்றது.ஆனால் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையில் கோயில் திறந்திருக்கும்.தீபாராதனை,அர்ச்சனை முதலியவற்றை அடியார்களே செய்யலாம். 

 

palalaa

 

சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி.

அம்பாள் : வள்ளி,தெய்வானை.

தீர்த்தம் : நூபுர கங்கை.

தலவிருட்சம் : நாவல்.

நடைதிறப்பு : காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : தமிழ்வருடப்பிறப்பு,வைகாசி விசாகம்,ஆடி கார்த்திகை,ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம்,கந்தசஷ்டி,கார்த்திகை சோமவாரம்,திருக்கார்த்திகை,பங்குனி உத்திரம்.
 

2018 TopTamilNews. All rights reserved.