கீழ்பவானி கால்வாயில் மூழ்கி இளம்பெண் பலி… மாயமான தந்தையை தேடும் பணி தீவிரம்…

 

கீழ்பவானி கால்வாயில் மூழ்கி இளம்பெண் பலி… மாயமான தந்தையை தேடும் பணி தீவிரம்…

ஈரோடு

பவானி அருகே கால்வாயில் குளித்த இளம்பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நீரில் மூழ்கிய அவரது தந்தையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், காயத்ரி (21), அனுஸ்ரீ (17) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். செல்வகணபதி சேலத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, நேற்று காரில் திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு நசியனூர் பகுதியில் சென்றபோது, அங்குள்ள கீழ்பவானி கால்வாயில் தந்தை மற்றும் மகள்கள் இருவரும் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது, காயத்ரி மற்றும் அனுஸ்ரீ ஆகியோர் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு, செல்வகணபதி, மகள்களை மீட்க முயன்றபோது, அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

கீழ்பவானி கால்வாயில் மூழ்கி இளம்பெண் பலி… மாயமான தந்தையை தேடும் பணி தீவிரம்…

கரையில் நின்றிருந்த செல்வி கூச்சலிட்டதை கண்டு, அருகில் இருந்தவர்கள் கால்வாயில் குதித்து மூவரையும் தேடினர். அப்போது, காயத்ரியை உயிருடன் மீட்டனர். ஆனால், நீண்டநேரம் தேடியும் மற்ற இருவரை மீட்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈபட்டனர்.

சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின், அனுஶ்ரீ உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். செல்வகணபதியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.