கரும்பு தோட்டத்தை சேதப்படுத்திய எருமை – அடித்தே கொல்லப்பட்ட டீன் வயது பையன்

 

கரும்பு தோட்டத்தை சேதப்படுத்திய எருமை – அடித்தே கொல்லப்பட்ட டீன் வயது பையன்

ஷாஜகான்பூர்: கரும்புத் தோட்டத்தை எருமை சேதப்படுத்தியதால், தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து தாக்கியதில் 15 வயது பையன் பரிதாபமாக உயிரிழந்தான்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள சிசாயா என்ற கிராமத்தில் குல்தீப் யாதவ் என்ற 15 வயது சிறுவன் எருமை மேய்த்துக் கொண்டு தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனது எருமை மாடு அருகில் இருந்த கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிரை சேதப்படுத்தியது. இதையடுத்து அந்த கரும்பு தோட்டத்தின் உரிமையாளரும் அவரது இரண்டு சகோதரர்களும் இணைந்து எருமையை பிடித்து வைத்துக் கொண்டனர்.

கரும்பு தோட்டத்தை சேதப்படுத்திய எருமை – அடித்தே கொல்லப்பட்ட டீன் வயது பையன்

எருமையை தன்னிடம் ஒப்படைக்குமாறு சிறுவன் எவ்வளவோ வாதாடியும் அவர்கள் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் சிறுவனுக்கும், அந்த மூவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் சிறுவனை மூவரும் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்த கொம்புகளால் சிறுவனை மயக்கம் அடையும் வரை மூவரும் தாக்கியுள்ளனர். பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். இதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில் 302 (கொலை) பிரிவின் கீழ் கரும்பு தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் சமாஜ்வாடி கட்சி மாவட்டத் தலைவர் தன்வீர் கானுடன் சேர்ந்து, ஷாஜகான்பூரில் உள்ள மூத்த போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.எஸ்.பி) அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.