வங்காள மொழியில் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய" ஜன கண மன" என்னும் பாடல் நம் நாட்டின் தேசிய கீதமாக 1950 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டது. வங்காள மொழியில் இருக்கும் இப்பாடலை, மொழி வேறுபாடின்றி இந்தியர்கள் அனைவரும் பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், தனது மாணவிகளுக்கு தேசிய கீதத்தைத் தமிழில் கற்றுக் கொடுத்து அதனைப் பாடுவது போன்ற வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் மாணவிகளின் நடுவே நின்று தேசிய கீதத்தைத் தமிழில் பாடுகிறார். அவரை பின் தொடர்ந்து மாணவிகளும் பாடுகின்றனர்.
அதில் அவர், தேசிய கீதத்தைத் தமிழில் பாடலாம் என்று கூறிய படி பாட ஆரம்பிக்கிறார். 'இனங்களும் மொழிகளும் ஆயிரம் இருந்தும் மனங்களில் பாரதத் தாயே.. வடக்கே விரிந்த தேசாபிமானம் தெற்கில் குமரியில் ஒலிக்கும்.. இன மத வேற்றுமை உடையிலிருந்தும் இதயத்தில் ஒற்றுமை பொங்கும்.. உலகில் எத்திசை அழிந்தும் இந்தியில் இந்திய நாடே' என்று பாடல் வரிகள் உள்ளன. இணைய தளங்களில் வைரல் ஆகி வரும் இந்த விடியோவை பலர் பாராட்டியும் ஷேர் செய்தும் வருகின்றனர்.