தஞ்சையில் மேலும் 25 பள்ளி மாணவிகள், ஒரு ஆசிரியைக்கு கொரோனா

 

தஞ்சையில் மேலும் 25 பள்ளி மாணவிகள், ஒரு ஆசிரியைக்கு கொரோனா

தஞ்சை

கும்பகோணத்தில் மேலும் 25 பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியை ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தஞ்சை மாவட்ட பள்ளிகளில் மொத்த பாதிப்பு 169 ஆக உயர்ந்து உள்ளது.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் முதன்முதலில் 58 மாணவிகள், ஆசிரியைகள் உள்பட 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளில் வைரஸ் தொற்று காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 15 மாணவர்களுக்கும், பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை என உள்பட 14 பேர் என 29 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றில் இருந்து மீண்ட 60-க்கும் மேற்பட்டோர் தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சையில் மேலும் 25 பள்ளி மாணவிகள், ஒரு ஆசிரியைக்கு கொரோனா

இதனிடையே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வில்லை என கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அபராதம் விதித்த மாவட்ட நிர்வாகம், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளி மீது வழக்குப் பதிவும் செய்தது.

இந்த நிலையில், கும்பகோணத்தில் அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் மேலும், 25 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.