நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

 

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதில் 160 இடங்களில் கோவிஷீல்டு மருந்துகளும் 6 இடங்களில் கோவேக்சினும் வழங்கப்பட உள்ளன.

தமிழக முழுவதும் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் , நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையில் தமிழகத்தின் 6 லட்சம் சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. சுகாதாரப்பணியாளர்கள் என்ற பட்டியலில் சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அடங்குவர்.

நாளை 166 இடங்களில் 19,073 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஒரு மணி நேரத்தில் 25 பேருக்கு என்ற அடிப்படையில் ஒரு மையத்தில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இவ்வாறாக நாளை 166 மையங்களில் 19,073 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. சென்னையை பொறுத்தவரை 4 அரசு மருத்துவக் கல்லூரிகள், 1 தனியார் மருத்துவமனை உட்பட 12 இடங்களில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், ஸ்டான்லி முதல்வர் பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளனர். நாளை காலை தடுப்பூசி விநியோக நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். அதன் பின்பு தமிழக முதல்வர் மதுரையில் தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கி வைத்து உரையாற்றுவார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும்.