`இதை கடைபிடியுங்கள்; மீறினால் நடவடிக்கைதான்!’- கைது விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

 

`இதை கடைபிடியுங்கள்; மீறினால் நடவடிக்கைதான்!’- கைது விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

ஒருவரை கைது செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர ஆணையர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் இதை மீறினால் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் தமிழக டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் தமிழக காவல்துறைக்கு எதிராக பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி பீகாரில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவை தமிழகத்திலும் அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் எனக்கூறி உத்தரவிட்டுள்ளார். அதில், “பீகார் அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஒன்றில் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனை பெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வது குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

`இதை கடைபிடியுங்கள்; மீறினால் நடவடிக்கைதான்!’- கைது விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

அதன் படி, ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைகள் பெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தகுந்த காரணங்கள் அல்லது முகாந்திரம் இல்லாமல் கைதுசெய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் விசாரணை அதிகாரியாக உள்ளவர் குற்றங்களுக்கான தன்மையை ஆராய்ந்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கான அவசியம் ஏற்பட்டால் அதனை எழுத்து மூலமாக பதிவு செய்த பின்பே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவில் தெளிவாகக் தெரிவித்துள்ளது. இதனை முறையாக செய்யாத விசாரணை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் விசாரணை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் குற்றவாளிகளை நீதித்துறை நடுவர்களிடம் ஆஜர்படுத்தும் போது அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்ற முழு விவரத்தையும் நீதித்துறை நடுவரிடம் விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் இயந்திரத்தனமாக செயல்படும் விசாரணை அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர ஆணையர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் இதை மீறினால் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.