பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பித்தப்பை கல்… அறிகுறிகள் அறிவோம்!

 

பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பித்தப்பை கல்… அறிகுறிகள் அறிவோம்!

நாம் சாப்பிட்ட உணவை செரிக்க பல நொதிகள் செரிமான மண்டலத்தில் உருவாகிறது. கொழுப்பை செரிக்கக் கல்லீரலில் பித்தநீர் உருவாகிறது. இது பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு duodenum எனப்படும் சிறுகுடலின் முதல் பகுதியில் சேர்கிறது. பித்த நாளமும் கணையத்திலிருந்து வரும் கணைய நாளமும் இணைந்துதான் சிறுகுடலில் இணைகின்றன. இதில் ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்னை காரணமாக பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பித்தப்பை கல்… அறிகுறிகள் அறிவோம்!

80 சதவிகித கற்கள் கொலஸ்டிராலால் ஆனது. 20 சதவிகிதம் மட்டுமே கால்சியம் உப்பு மற்றும் பிலிருபினால் ஆனவையாக இருக்கிறது.

பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டால் அது பித்த நாளத்தின் வழியாக சென்று கணைய நாளத்தை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இப்படி கணைய நாளம் அடைத்துக்கொண்டால் கணைய நீர் வெளியேற வழியின்றி கணைய அழற்சி உள்ளிட்ட பாதிப்பு ஏற்படலாம்.

எனவே, பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டால் பித்தப்பையை அகற்றி கல்லீரலில் உருவாகும் பிலுருபின் என்ற திரவம் நேரடியாக சிறுகுடலில் சேர்க்க அறுவைசிகிச்சை செய்வது ஒன்றே தீர்வாக உள்ளது.

பித்தப்பை கல் அறிகுறிகள்

பித்தப்பை கல் உருவாவதை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது சாத்தியமில்லை. பித்தப்பையில் அடைப்பு ஏற்படும்போதுதான் அறிகுறிகள் தென்படும்.

வலது நெஞ்சுக் கூட்டுக்குக் கீழ், மேல் வயிற்றுப் பகுதியில் திடீரென்று தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி விட்டு விட்டு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

சிலருக்கு வயிற்றின் மையப்பகுதியில் வலி ஏற்படும்.

தோள்பட்டை மற்றும் முதுகுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி இருக்கும்.

வலது தோள்பட்டையில் தாங்க முடியாத வலி ஏற்படும்.

வாந்தி, குமட்டல் ஏற்படும்.

களிமண் நிறத்தில் மலம் வெளியேறும்.

சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.

செரிமானக்குறைபாடு, வயிறு வலி ஏற்படும்.

உடனடியாக இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மஞ்சள் காமாலை, பித்தப்பையில் நோய்த் தொற்று, செப்சிஸ் எனப்படும் நோய்த் தொற்று ரத்தத்தில் பரவுதல், கணைய வீக்கம், பித்தப்பை புற்றுநோய் என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

யாருக்கு எல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

உடல் பருமன், அதிக கொழுப்பு மிக்க உணவுகளை உட்கொள்பவர்கள், மிகக் குறைந்த காலத்தில் உடல் எடையைக் குறைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கல் பிரச்னை ஏற்படலாம். இவை எல்லாம் நம்மால் தடுக்கக் கூடிய காரணியாக இருக்கின்றன.

நம்மால் தடுக்க முடியாத காரணிகள் காரணமாகவும் பித்தப்பை கல் வரலாம். பெண்களுக்கு பித்தப்பை கல் பிரச்னை வர வாய்ப்பு அதிகம். குடும்பத்தில் மூத்தவர்கள் யாருக்காவது பித்தப்பை கல் பிரச்னை வந்திருப்பது, 60 வயதைக் கடந்தவர்களுக்கும் பித்தப்பை கல் பிரச்னை வரலாம்.

இது தவிர கல்லீரல் சுருக்கப் பாதிப்பு, கர்ப்பிணிகள், கொழுப்பைக் குறைக்க உதவும் சில வகையான மாத்தரைகள் எடுத்துக்கொள்பவர்கள், ஈஸ்ட்ரோஜென் அதிக அளவில் உள்ள மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கும் பித்தப்பை கல் பிரச்னை வரலாம்.