டைபாய்டு காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

 

டைபாய்டு காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

பொதுவாக காய்ச்சல் என்பது நோய் இல்லை என்று சொல்வார்கள். அது நோயின் ஒரு அறிகுறி மட்டுமே. நம் உடலில் நுழைந்த கிருமிகளை அழிக்க உடல் மேற்கொள்ளும் நடவடிக்கை காய்ச்சல். வைரஸ் கிருமி காரணமாக டெங்கு, சிக்குன்குனியா, கொரோனா காய்ச்சல் வருகிறது. பாக்டீரியா கிருமி காரணமாக ஏற்படக் கூடிய மிக முக்கிய பாதிப்பு டைபாய்டு எனப்படும் குடல் காய்ச்சல்.

டைபாய்டு காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

டைபாய்டு காய்ச்சலை சாலமோனெல்லா டைப்பி பாக்டீரியா ஏற்படுத்துகிறது. வளர்ந்த நாடுகளில் இந்த காய்ச்சல் மிகக் குறைவுதான். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் இந்த காய்ச்சல் அதிக அளவில் ஏற்படுகிறது.

சாலமோனெல்லா டைப்பி பாக்டீரியா மாசு அடைந்த தண்ணீர், உணவு மூலமாகவே மனிதர்களுக்குப் பரவுகிறது. நோய்த் தொற்று உள்ள நபர் தொட்டு செய்யும் உணவு, வழங்கும் பானங்கள் வழியாக பாக்டீரியா ஆரோக்கியமான நபர்களுக்கும் பரவுகிறது.

டைபாய்டு காய்ச்சல் வந்து சரியானவர்கள் சிலரின் உடலில் பாக்டீரியா கிருமி நிரந்தரமாக தங்கிவிடும். இவர்கள் கிருமியைச் சுமப்பவர்களாக கருதப்படுவார்கள். இவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் பரவுகிறது. உலகம் முழுவதும் ஓராண்டில் மட்டும் 2.6 கோடி பேருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

பாக்டீரியா கிருமித் தொற்று ஏற்பட்டதில் இன்று மூன்று வாரங்களில் நோய்த் தொற்று கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரம் அடையும். அப்படி தொற்று ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகள்…

காய்ச்சல் ஏற்படும். முதலில் சாதாரண காய்ச்சல் போல இருக்கும். போக போக 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு காய்ச்சல் செல்லும்.

தலைவலி

உடல் வலி, சோர்வு

அதிக வியர்வை

வறட்டு இருமல்

பசியின்மை, உடல் எடை இழப்பு

வயிற்று வலி

வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல்

நோய்த் தீவிர பாதிப்பாக மாறும்போது ஏற்படும் அறிகுறிகள்…

மயக்கம்

கண்கள் பாதி மூடிய நிலையில் அசைவற்ற நிலை. இதை டைபாய்டு நிலை என்று சொல்வார்கள்.

இந்த நிலைக்குச் சென்றுவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியலாம்.

டைபாய்டு காய்ச்சல் வராமல் தடுக்க…

டைபாய்டு காய்ச்சல்… அறிகுறிகள் அறிவோம்!

மாசு அடைந்த நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த வேண்டாம்.

சுகாதாரமற்ற இடங்களில் தயாரிக்கப்படும் உணவு, பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டாம். சரியாக வேகாத, அரை வேக்காடு உணவுகளை எடுக்க வேண்டாம்.

பொது சுகாதாரத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். கைகளை அவ்வப்போது கிருமிநாசினி போட்டுக் கழுவ வேண்டும். டைபாய்டு நோயாளியுடன் நேரடியான தொடர்பு வேண்டாம். டைபாய்டு நோயாளிகள் உணவைத் தயாரிக்கவோ, மற்றவர்களுக்கு பரிமாறுவதையோ அனுமதிக்க வேண்டாம்.