ஈசன் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் அறிய தலம்…சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலய சிறப்பு!

இன்று சனி மகா பிரதோஷம். ஆதலால் பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிவாலங்களில் ஒன்றான சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் பற்றி வாசிப்போம் யோசிப்போம் மனசீகமாக தரிசிப்போம்.

சிவபெருமானை நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ லிங்க வடிவிலோ தான் தரிசித்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். அவரது திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர் என்பதாகும்.

ஈசன் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் அறிய தலம் ஒன்று உண்டு என்றால் அது சுருட்டப்பள்ளி தான். இத்தலம் தமிழக எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டையை அடுத்து ஆந்திர எல்லையில் அமைந்த்துள்ளது.

இத்தலம் உருவானதே பிரதோஷத்தையொட்டி தான். அதாவது அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆரம்பத்தில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை கண்டு அகிலமே அதிர்ந்த போது தாம் படைத்த ஜீவராசிகள் துன்புறுவதை பொறுக்காமல் ஈசன் அதை தானே உண்ண முன் வந்து விழுங்கினார்.

அது கண்ட உமை ஈசனின் கழுத்தை பிடித்து விஷம் உள்ளே இறங்காமல் தொண்டையிலேயே நிற்கும் படி செய்தார். அதனாலேயே ஈசன் நீலகண்டன் ஆனார். அந்த அமளி துமளியில் சற்றே ஓய்வு எடுக்க எண்ணிய ஈசன் உமையவள் மடிமீது தலை சாய்த்து பள்ளிகொண்டார். அதுவே சுருட்டப்பள்ளி தலத்து திருக்கோலம். எனவே இங்கு பிரதோசம் விசேஷமாகும்.

எல்லா பிரதோஷ தினங்களிலுமே சுருட்டப்பள்ளியில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். அதிலும் சனி மகாப்பிரதோஷம் என்றால் கூட்டம் அலைமோதும் . கோயிலைச் சுற்றி பக்தர்களின். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் குவிந்து விடும். பேருந்துகள் கோயில் வாசலிலேயே நிற்கிறது. அதனால் கோயில் செல்வது எளிது.

பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோயிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது. அதனை அடுத்து அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் கொடிமரம் பலிபீடம் பிரதோச நந்தி என சிவாலயத்திற்கே உரிய எழிலுடன் விரிகிறது.

பள்ளி கொண்டீசனால் பிரபலமான கோயில் என்றாலும் மூலவர் வால்மீகேஸ்வரர் தான். இத்தலத்தில் தவமிருந்த வால்மீகி முனிவருக்கு ஈசன் சுயம்பு லிங்கமாக காட்சி கொடுத்து அருளிதால் இத் திருநாமம் ஏற்பட்டது. வால்மீகேஸ்வரர் சன்னிதி பின்புறம் உட்பிரகாரத்தில் வால்மீகி சன்னிதியும் உள்ளது. இன்னுமொரு விசேஷம் மூலவர் எதிரே நந்திக்கும் முன்னால் ராமலிங்கேஸ்வரர் லிங்கம் அமைந்துள்ளது. அருகில் பர்வதவர்த்தினி அம்பாள் உள்ளார். பக்கத்தில் ராமர் சன்னதி உள்ளது. சீதாபிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயர், பரதன், சத்ருக்கன் உடன் உள்ளனர்.

இங்கு அம்பாள் மரகதாம்பிகை சுவாமியின் வலது புறத்தில் வீற்றிருக்கிறார். அம்மையின் எழிலான தோற்றம் மனதை கவர்கிறது. அவரது சன்னிதியின் முன் மண்டபத்தில் வலப்புறம் சங்க நிதியும் இடப்புறம் பத்மநிதியும் தம் மனைவியுடன் காட்சி தருகின்றனர். உள்ளே கற்பகவிருட்சம், காமதேனு ஆகியன உள்ளன . அருகே சாலக்கிராம விநாயகர் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

திருச்சுற்றில் நால்வர், சித்தி விநாயகர், அதனையடுத்து ஒரே மேடையில் வரிசையாக ஜுவரஹரேஸ்வரர், விஷ்ணு பைரவர், பைரவர், வால்மீகி, ஏகபாத திரிமூர்த்தி, பூர்ணகலா புஷ்பகலா சமேத தர்மசாஸ்தா ஆகியோரும் உள்ளனர் . அடுத்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் தென்முகமாக இருக்கிறார்.

கோஷ்டத்தில் தெட்சிணாமுர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அதில் தெட்சணாமூர்த்தி மிக விசேஷமானவர். காரணம் அவரது வாமபாகத்தில் அம்பாள் அணைத்த படி இருப்பது அபூர்வமான ஒன்றாகும். இப்படி தம்பதி சமேதராக தெட்சிணாமுர்த்தியை காண்பதறிது.

பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரை அடுத்து காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி, சன்னிதிகள் உள்ளன. அதனையடுத்து பள்ளி அறை, அதனருகே வேணுகோபாலர், பைரவர், லவகுசர்களின் திருப்பாதங்கள் அதுவும் 12 ஜோடி சின்னஞ்சிறு பாதங்கள் பார்க்க அழகோ அழகு. ஈசனை பார்த்தபடி குபேரர் என்று எல்லாம் மனதிற்கினிதாக அமைந்துள்ளன. சந்திர சூரியர் வெளிப்பிரகாரத்தில் சப்தமாதாக்கள். தலவிருட்சம் எல்லாம் மன நிறைவளிக்கும் விதமாக உள்ளன.

வடக்கு பிரகாரத்தில் தனியே பள்ளிகொண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. பாற்கடலைக் கடைந்தபோது, திரண்டு வந்த ஆலாகால விஷத்தை உண்ட சிவன் திருநீலகண்டனாக சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்டிருக்கும் கோலத்தை அங்கு காணலாம். இங்கு சிவபெருமான், பார்வதிதேவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தை காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

பள்ளி கொண்டுள்ள ஈசனுக்கு அருகே மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், பிருகு மகரிஷி, பிரம்மா, சூரியன், சந்திரன், குபேரன், சப்த ரிஷிகள் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர், கிம்புருடர் ஆகிய அனைவரும் சிவனை வணங்குகின்றனர்.

அரியதாக பள்ளி கொண்டுள்ள ஈசனை சுருட்டப்பள்ளி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.

பிரமாண்ட வடிவத்தில பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயன கோலத்தில் உள்ளார். ‘சர்வமங்களா’ என்ற திருநாமம் பெற்று அம்பாள் பார்வதி விளங்குகிறாள். இவளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து சுருட்டப்பள்ளிக்கு நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது ஒரு எட்டு போய் தரிசித்து விட்டு வாருங்கள். வாழ்வில் நலங்கள் பெருகும்.

-மு.ரா.சுந்தரமூர்த்தி.

Most Popular

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...

கடல்சீற்றத்தால் உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிவாரணம்!

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை பி கிராமத்தில் கடந்த 8.8.2020 அன்று கடல் சீற்றத்தினால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் மரியதாஸ் என்பவருடைய வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து,...