தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

 

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

தினமும் இரண்டு முட்டை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. முடியாதவர்கள் குறைந்தது ஒரு முட்டையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் முட்டை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான். முட்டை சாப்பிட்டால் கொழுப்பு அளவு அதிகரித்துவிடுமே என்று பலரும் பயப்படுகின்றனர்.

தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா?

இது உண்மையில்லை, கொழுப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. முட்டையில் இருந்து நமக்கு அதிக அளவில் புரதம், அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்சிடண்ட், நல்ல கொழுப்புக்கள் கிடைக்கின்றன. எனவே, முட்டையை தாராளமாக சாப்பிடலாம் என்று நம்பிக்கை வார்க்கின்றனர்.

தொடர்ந்து முட்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் உடல் எடையைக் குறைக்கத்தான் செய்யும். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ஒபிசிட்டி வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், உடல் பருமனால் அவதியுறும் குழுவினருக்கு ஒரு நாளைக்கு இரண்டு முட்டை என எட்டு வாரங்களுக்கு காலை உணவாக முட்டை மட்டுமே வழங்கப்பட்டது. எட்டு வார முடிவில் அவர்களில் 65 சதவிகிதம் பேருக்கு அதிக அளவில் உடல் எடை குறைந்திருந்தது. மற்றவர்களுக்கும் உடல் எடை, உடலில் உள்ள கொழுப்பு அளவு குறைந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

முட்டையில் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு உள்ளது. இது இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதிலிருந்து காக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளிட்ட வாழ்வியல் நோய்கள் வருவதற்கான வாய்ப்பை முட்டை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசையில் பாதிப்பு ஏற்படும். இதை உடனடியாக சரி செய்ய புரதச்சத்து அதிக அளவில் தேவை. முட்டையில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. அது தசைகள் உறுதியாவதை உறுதி செய்யும்.

ஒரு முட்டையில் நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் செலீனியம் தாதுஉப்பில் 22 சதவிகிதம் உள்ளது. இந்த செலீனியம்தான் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தைராய்டு ஹார்மோன் சுரப்பை ஒழுங்குபடுத்த உதவுகிறது. எனவே, முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். உள் உறுப்புக்கள், எலும்புகள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

முட்டையை மூளைக்கான சிறந்த உணவு என்று கூட சொல்லலாம். இதில் அதிக அளவில் கொலைன் என்ற ஊட்டச்சத்து உள்ளது. இது நியூரோடிரான்ஸ்மிட்டர் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.