அனில் தேஷ்முக் மீதான லஞ்ச புகார்.. சி.பி.ஐ. விசாரிக்க தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம்

 

அனில் தேஷ்முக் மீதான லஞ்ச புகார்.. சி.பி.ஐ. விசாரிக்க தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம்

அனில் தேஷ்முக் மீதான லஞ்ச புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாதந்தோறும் ரூ.100 கோடி வசூல் செய்து தரும்படி மும்பை குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் வலியுறுத்தியதாகவும், அதனை சச்சின் வாசே தன்னிடம் தெரிவித்ததாகவும் மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். மேலும், அனில் தேஷ்முக் மீதான லஞ்சப்புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் பரம் பீர் சிங் செய்தார்.

அனில் தேஷ்முக் மீதான லஞ்ச புகார்.. சி.பி.ஐ. விசாரிக்க தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மேலும் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீ பாட்டீல் மற்றும் ஆசிரியர் மோகன் என்பவரும் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதனையடுத்து கடந்த 5ம் தேதியன்று அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு குறித்து 15 தினங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொள்ளும்படி சி.பி.ஐ.க்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி சி.பி.ஐ.க்கு அறிவுறுத்தியது. இதனையடுத்த அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அனில் தேஷ்முக் மீதான லஞ்ச புகார்.. சி.பி.ஐ. விசாரிக்க தடை விதிக்க முடியாது.. உச்ச நீதிமன்றம்
சி.பி.ஐ.

அனில் தேஷ்முக் மீதான லஞ்சப்புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசும், அனில் தேஷ்முக்கும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் ஹேமந்த் குப்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாராஷ்டிரா அரசு மற்றும் அனில் தேஷ்முக்கின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் குற்றச்சாட்டின் தன்மை மற்றும் குற்றச்சாட்டுகளின் தீவிரம் ஆகியவற்றை பார்க்கும்போது அதற்கு ஒரு சுயாதீன அமைப்பின் விசாரணை தேவைப்படுகிறது. இது மக்கள் நம்பிக்கைக்குரிய விஷயம். சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துள்ளது மகாராஷ்டிரா அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.