இந்தியாவின் பெயரை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

 

இந்தியாவின் பெயரை மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கவில்லை.
இந்தியா அதாவது பாரத் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இந்தியா என்றும் இந்தியில் பாரத் என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது. இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு பாரத் என்ற பெயரையே அனைத்து மொழிகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பாரத் என்ற பெயரே இந்தியாவின் உண்மையான பெயர். இந்தியா என்னும் பெயர் அடிமைத்தனத்தின் அடையாளம். பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதே விடுதலைக்காக போராடியவர்களுக்கு கிடைக்கும் நியாயமாக இருக்கும்.
ஆதார் அட்டையில் பாரத் சர்க்கார் என்று உள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் யூனியன் ஆஃப் இந்தியா என்று உள்ளது. இப்படி மாற்றி மாற்றி பயன்படுத்துவதற்கு பதில் ஒரே பெயரைப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுதாரர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் வேறு வழக்குகளில் நீதிமன்றம் கவனம் செலுத்தியதால் இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, இந்த மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு என்று மக்கள் அவதியுற்று வரும் நிலையில், இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்வது தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.