சுண்டைக்காய் குழம்பு… சுவையான கிராமத்துச் சமையல்!

 

சுண்டைக்காய் குழம்பு… சுவையான கிராமத்துச் சமையல்!

சுண்டைக்காய்… இதன் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது. ஆனால், மருத்துவக் குணம் நிறைந்தது. மருந்துகள் பொதுவாக கசப்புச் சுவை நிறைந்ததாக இருக்கும். சுண்டைக்காயும்கூட கசப்புதான். ஆனால், வயிற்றுப்பூச்சிகளை கொல்வதில் இருந்து மூலநோயைக் குணப்படுத்துவது, ஹீமோகுளோபினை அதிகரிப்பது என பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது.

சுண்டைக்காய் குழம்பு… சுவையான கிராமத்துச் சமையல்!கிராமத்து சமையல்:
மருத்துவக் குணம் நிறைந்த இந்த சுண்டைக்காயில் கிராமத்துப் பாணியில் சுவையான குழம்பு செய்து சாப்பிடலாம். சுண்டைக்காய் குழம்பு செய்ய பச்சை சுண்டைக்காய் ஒரு கப் தேவை. காய்ந்த மிளகாய் (குண்டு மிளகாய்) ஏழு எண்ணிக்கை, புளி ஒரு எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்த் துருவல் ஒரு கப், கொத்தமல்லி (தனியா) இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன் எடுக்கவும். தேவைக்கேற்ப உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். தாளிப்பதற்கு இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய்யுடன் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதன்மீது அலங்காரம் செய்ய பொடியாக நறுக்கிய மல்லித்தழை எடுத்துக் கொள்ளுங்கள்.

சுண்டைக்காய் குழம்பு… சுவையான கிராமத்துச் சமையல்!
சுண்டைக்காய்:
முதலில் சுண்டைக்காயை நசுக்கி அதிலுள்ள விதைகளை நீக்க வேண்டும். விதை நீக்கப்பட்ட சுண்டைக்காயுடன் கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலந்து மூழ்குமளவு நீர் ஊற்றி சிறிதுநேரம் ஊற வைக்க வேண்டும். இதையடுத்து எண்ணெய் ஊற்றாத வாணலியில் கடலைப்பருப்பு, கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுக்க வேண்டும்.

அரைத்த இந்தக் கலவையுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஊற வைத்து வடிகட்டிய புளி, உப்பு கரைசலில் கட்டியில்லாமல் கரைக்க வேண்டும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருள்களை தாளிக்க வேண்டும். இத்துடன் கரைத்து வைத்த பொருள்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

சுண்டைக்காய் குழம்பு… சுவையான கிராமத்துச் சமையல்!ஆரோக்கியம்:
இதையடுத்து சிறிய கடாயில் நல்லெண்ணெய் விட்டு விதை நீக்கிய சுண்டைக்காயை வறுத்து குழம்பில் சேர்த்தால் சுண்டைக்காய் குழம்பு தயார். பரிமாறும்போது மல்லித்தழை தூவி பரிமாறினால் ஆரோக்கியமான சுண்டைக்காய் குழம்பு தயார். சுடச்சுட சாதம், இட்லி, தோசையுடன் இந்தக் குழம்பை சேர்த்துச் சாப்பிடலாம்.

இட்லி, தோசை செய்யும்போது சாம்பார், சட்னி என்றில்லாமல் மிளகு குழம்பு, சுண்டைக்காய் குழம்பு என வித்தியாசமாக செய்து சாப்பிடலாம். இந்தக் குழம்புகள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. குழந்தைகளை சிறுவயதிலேயே பழக்கினால் பெரியவர்களானதும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.