முதுமையில் தடுமாற்றமா? மருத்துவர் எளிய யோசனை!

 

முதுமையில் தடுமாற்றமா? மருத்துவர் எளிய யோசனை!

முதுமை… இந்தக் காலத்தை சுகமாகக் கடக்க நிறைய வழிகள் உள்ளன. பொதுவாக முதுமைக் காலத்தில் கீழே விழாதவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஏதோவொரு சூழலில் கீழே விழ நேர்ந்தால் அதன்பிறகான வாழ்க்கை மிகுந்த துன்பத்தைத் தரும். பாதிக்கப்பட்டவர் மட்டுமல்ல அவரைக் கண்காணிப்பவரும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, முதுமைக் காலத்தில் தடுக்கி கீழே விழாமல் தற்காத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்போம்.

முதுமையில் தடுமாற்றமா? மருத்துவர் எளிய யோசனை!சமநிலை:
“முதுமைக் காலத்தில் `இம்பேலன்ஸ்’ விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். நரம்புகள், மூட்டுகளில் நடக்கும் செயல்பாடுகள் தண்டுவடம் மூலம் மூளையைச் சென்றடையும். அதேபோல் கண், உட்காதின் செயல்பாடுகள் நரம்புகள் வழியாக மூளையைச் சென்று சேரும். இந்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சீராக இருக்கும்போது எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால், இந்தச் செயல்பாட்டின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் சமநிலை பாதிக்கப்படும்.
முதியோர் கீழே விழாமல் தடுக்கச் சில பரிசோதனைகளை சுயமாகச் செய்து பார்க்க வேண்டியது அவசியம். முதலில் `ராம்பெர்க் டெஸ்ட்’ (Romberg Test). இந்தப் பரிசோதனையின்போது ஒருவர் துணையுடன் இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைத்து, கண்கள் மூடியபடி நேராக நிற்க வேண்டும். சில விநாடிகள் கழித்து கண்களைத் திறந்து பார்த்து மீண்டும் கண்களை மூட வேண்டும். அப்போது தடுமாற்றம் ஏற்படாமலிருக்க வேண்டும். தடுமாற்றம் ஏற்பட்டால் அவர்கள் கீழே விழ வாய்ப்பு அதிகம். எனவே, முதுமையில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதுமையில் தடுமாற்றமா? மருத்துவர் எளிய யோசனை!
டேன்டெம் வாக்:
அடுத்தது `டேன்டெம் வாக்’ (Tandem Walk). ஒரு நேர்க்கோட்டில் அடி மேல் அடி வைத்து நடக்க வேண்டும். அப்போது 10 அடி தூரத்தைத் தள்ளாடாமல் கடந்தால் அவருக்குப் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று பொருள். மூன்றாவது `Get up and Go’ எனப்படும் எழுந்து நடக்கும் பரிசோதனை. முதலில் கைப்பிடி உள்ள நாற்காலியில் உட்கார வேண்டும். `Go’ என்று சொன்னதும் 10 அடி தூரம் நேர்க்கோட்டில் தள்ளாடாமல் சென்று திரும்பிவந்து அதே இருக்கையில் அமர வேண்டும். இந்தப் பயிற்சியை 10 விநாடிகளுக்குள் செய்ய வேண்டும். நேரம் அதிகமானால் அவர் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

யாரெல்லாம் கீழே விழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு ஒரு வினா விடையை அவர்களாகவே நடத்திக்கொள்ள வேண்டும்.
* ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கிறதா?
* அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறதா?
* மறதி நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?
* பார்வைக் குறைபாடு உள்ளதா?
* காது கேட்கும் திறன் குறைவாக இருக்கிறதா?
* அதிக எண்ணிக்கையில் மாத்திரை எடுத்துக் கொள்பவரா?
* ஒரு வருடத்துக்கு முன்பாக கீழே விழுந்திருக்கிறீர்களா?
* முழங்கால், மூட்டுவலி, கழுத்துத் தேய்மானம் உள்ளவரா?
* தினம் மது அருந்தும் பழக்கம் உள்ளவரா?
* காலணியை மாற்றி ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிறதா?
* பாதத்தில் தொடு உணர்ச்சி குறைவாக உள்ளதா?
* கைத்தடி, வாக்கர் பயன்படுத்துகிறீர்களா?
* உங்கள் வீட்டில் போதிய வெளிச்சம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா அல்லது யாராவது சொல்லியிருக்கிறார்களா?
* குளியலறை வழவழப்பாக உள்ளதா?
* வீட்டில் உள்ள படிக்கட்டுகள் உயரமாக உள்ளனவா?

முதுமையில் தடுமாற்றமா? மருத்துவர் எளிய யோசனை!ஆலோசனை:
இவற்றில் பல கேள்விகளுக்கு `ஆம்’ என்பது பதிலாக இருந்தால், அவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்டவர்கள் சிலவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். நோய் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை எடுத்து நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கண் மற்றும் காது பிரச்னைகளை உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் அவற்றைக் குறைக்க சாத்தியம் உள்ளதா என்பதை மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். நடப்பதற்கு வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்த வேண்டும். பொருத்தமான காலணிகளை உபயோகிக்க வேண்டும். தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். `நடந்தால் நாடும் உறவாகும்; படுத்தால் பாயும் பகையாகும்’ என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் முதுமையில் கீழே விழுவதைத் தடுக்கலாம்”.
டாக்டர் நடராஜன் சொல்லும் இந்த ஆலோசனைகளின்படி நடந்தால் முதுமையில் தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.