பண ஆசையை தூண்டிய கஞ்சா வியாபாரி… லாட்ஜியில் அறை எடுத்து விற்பனை… சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மகன், 5 மாணவர்கள்

 

பண ஆசையை தூண்டிய கஞ்சா வியாபாரி… லாட்ஜியில் அறை எடுத்து விற்பனை… சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் மகன், 5 மாணவர்கள்

பண ஆசைகாட்டி மாணவர்களை கஞ்சா விற்பனை செய்ய வைத்த வியாபாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் மகன் ஆவார்.

கொரோனா ஊரடங்கால் கொள்ளை, ஆள் கடத்தல், கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காலத்திலும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்களும் தங்கம், கரன்சியை கடத்தி வருகின்றனர். சென்னையில் கஞ்சா கடத்தலில் மாணவர்களே ஈடுபட்டு வருவதுதான் வேதனையாக இருக்கிறது. கடத்தலை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், விருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இளைஞர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் அந்த இளைஞர்களை கண்காணிக்க தொடங்கினர். அப்போது, அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடுதியில் அதிரடியாக புகுந்த காவல்துறையினர், ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். ஒரு அறையில் இருந்த இளைஞர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இளைஞர்கள் 6 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. மேலும், இதில் ஒரு மாணவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், “சென்னையில் உள்ள அரசு கல்லூரியில் நாங்கள் படித்து வருகிறோம். தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் எங்களுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவர் எங்களிடம், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். பணத்துக்கு ஆசைபட்டு அவர் எங்களை கஞ்சா விற்க செய்தார். எங்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் விக்னேஷ் எங்களுக்கு கஞ்சா பொட்டலங்களை தருவார்.

இந்த கஞ்சா பொட்டலத்தை விக்னேஷ் சொல்லும் நபரிடம் கொடுப்போம். வீட்டிற்கு கஞ்சாவை எடுத்து செல்ல முடியாததால் விடுதியில் அறை எடுத்து கஞ்சாவை பாதுகாத்து வந்தோம். கஞ்சாவை மதுரவாயல், வளசரவாக்கம், தி நகரில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்துள்ளோம். கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக்கி தயாராக எப்போதும் வைத்திருப்போம். நாங்கள் அடிக்கடி விடுதிக்கு சென்று வந்ததால் அருகில் இருந்தவர்கள் எங்கள் மீது சந்தேகம் அடைந்தனர். அவர்கள் காவல்துறையினரிடம் சிக்க வைத்துவிட்டனர்” என்று கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா, கஞ்சாவை பொட்டலங்களாக்க பயன்படுத்தபடும் பாலித்தீன் பேப்பர், எடை மெஷின் மற்றும் ரூ.30,000 பணம், 3 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சா வியாபாரி விக்னேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.